பினாங்கு மாநிலத்தில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்துவதிலும், தமிழ்ப்பள்ளிகளின் சுற்றுச்சூழலை டிஜிட்டல் மயமாக்குவதில் பல்வேறு கூட்டுத் திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வரும் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையிலான பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக்குழு, 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு முதல் கட்டமாக 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணியை வழங்கியது.
டிஜிட்டல் உலகில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான சிறப்புக்குழுவின் துணைத் தலைவரும் பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான குமரன் கிருஷ்ணனின் முன்னெடுப்பில் ஒன்றரை லட்சம் ரிங்கிட் செலவில் இந்த கைக்கணினி வழங்கப்பட்டது.
மாணவர்களிடையே டிஜிட்டல் கல்வி மற்றும் டிஜிட்டல் நூலகத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த கைக்கணித் திட்டம், சிறப்பாக அமைந்தால், அடுத்த வருடமும் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று குமரன் கிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே மலாய்மொழியை வளப்படுத்தும் அதேவேளையில் வரலாற்றுப்பாடத்தின் கற்றலையும் மேம்படுத்தும் வகையில் தலைமையாசிரியர் மன்றத்தின் வழிகாட்டலுடனும், கல்வி இலாகாவின் அங்கீகாரத்துடனும் 4,5,6 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இவ்விரு பாடங்களுக்கான புத்தகங்களையும் சிறப்புக்குழு வழங்கியிருப்பதாக குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.
பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்கான வருடாந்திர திட்டங்களில் ஒரு பகுதியாக எல்லா பள்ளிகளிலும் ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் மூலமாக சமய வகுப்பு, அனைத்து பள்ளிகளிலும் சாமி மேடை அமைக்கும் திட்டம், வருடத்திற்கு இரண்டு பள்ளிகளுக்கு சாயம் பூசும் திட்டமும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறப்புக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு விவ ரித்தார். மாநில சிறப்புக்குழுவின் தமிழ்ப்பள்ளிகளின் நலன் சார்ந்த திட்டங்களை நல்ல முறையில் முன்னெடுத்து வரும் குமரன் கிருஷ்ணனுக்கு டத்தோ சுந்தராஜு தமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டர்.
இந்த திட்டங்கள் அனைத்தும் முறையாக டெண்டர் விடப்பட்டு, நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அதேபோல் பள்ளிகளில் சாமி மேடை அமைக்கும் திட்டம், ஸ்டேம் கல்விக்கான திட்டம், டிஜிட்டல் டேப்லட் கைக்கணினி திட்டம், சாயம் பூசும் திட்டம் அனைத்தும் முறையாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாக குமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.








