கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.20-
சபாவைத் தளமாகக் கொண்ட முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணம் தொடர்பில் அந்த 13 வயது மாணவியைப் பகடிவதை செய்ததாக வயது குறைந்த 5 பிள்ளைகள் கோத்தா கினபாலு, சிறார் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
மாணவி ஸாரா கைரினாவைப் பகடிவதைச் செய்ததுடன் தவறான வார்த்தைகளைப் பிரயோகித்ததாக அந்த ஐந்து பிள்ளைகளும் குற்றவியல் சட்டம் 507C மற்றும் அதே குற்றவியல் சட்டத்தின் 35 பிரிவு ஆகியவற்றின் கீழ் பள்ளி மாணவிகள் என்று நம்பப்படும் அந்த ஐவரும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எல்சி பிரிமுஸ் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டுச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரின் விவரங்கள் குறிப்பாக அடையாளங்கள், புகைப்படங்கள் முதலியவற்றை வெளியிடுவதற்குத் தடை விதிக்கும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டம் இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கானத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் டத்தோ ராம் சிங் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு நீதிபதி எல்சி பிரிமுஸ் Elsie Primus பிறப்பித்தார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வை உறுதிச் செய்வதற்கு அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதை பிராசிகியூஷன் அதிகாரி துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நோர் அஸிஸா முகமட் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஜுலை 16 ஆம் தேதி, சபா, பாபாரில் தாம் பயின்று வந்த பள்ளியின் தங்கும் விடுதியில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்த மாணவி ஸாரா கைரினா, சுயநினைவு இழந்த நிலையில் குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் உயிரிழந்தார்.
அந்த மாணவி இறப்பதற்கு முன்னதாக அவரைச் சம்பந்தப்பட்ட ஐந்து பிள்ளைகளும் பகடிவதைச் செய்து, தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
எனினும் அந்த ஐவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு நபர் உத்தரவாதத்துடன் 5 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்படுவதாகவும், முன் பணமாக ஆயிரம் ரிங்கிட் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.








