ஷா ஆலாம், அக்டோபர்.05-
சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங்கை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஸ் கட்சி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வலியுறுத்தியுள்ளது. அரசு நிகழ்ச்சி ஒன்றில் மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சை, இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபாலி ஷாரி குற்றம் சாட்டியுள்ளார். இஃது ஓர் அரசின் நிதிச் சுற்றறிக்கையை மீறிய செயல் மட்டுமல்லாமல், இஸ்லாத்தை நாட்டின் அதிகாரப்படியான மதமாக நிலைநிறுத்தும் அரசியலமைப்பின் 3வது பிரிவுக்கு எதிரானது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்தச் செயல் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகவும், நாட்டின் இஸ்லாமியக் கண்ணியத்தைக் குலைப்பதாகவும் உள்ளது என்றும் பாஸ் கட்சி இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும் அஹ்மாட் ஃபாலி ஷாரி குறிப்பிட்டார்.








