பட்டர்வொர்த், ஆகஸ்ட்.11-
தனது 10 வயது மகளைக் கைப்பேசி சார்ஜர் ஒயரினால் அடித்து, காயப்படுத்தியதுடன் மகளின் வாயில் சிவப்பு மிளகாயை திணித்து சித்ரவதை செய்ததாக நம்பப்படும் தாயார் ஒருவர் பட்டர்வொர்த், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
33 வயது நோர் அக்மா ஷுஹைடா ரோசிடி என்ற அந்த மாது கடந்த ஜுலை முதல் தேதி காலை 10 மணியளவில் கப்பாளா பாத்தாஸ், பண்டார் பெர்தாம் புத்ராவில் உள்ள தனது வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை அல்லது கூடியபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சிறார் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அந்த மாது விசாரணை கோரியிருப்பதால் அவரை ஒரு நபர் உத்தராதத்துடன் நிபந்தனையின் அடிப்படையில் 8 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.








