கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
தாங்கள் சாப்பிட்டுத் துப்பிய எலும்புத் துண்டுகளை வீடற்ற நபர் ஒருவருக்குக் கொடுத்தது, சமூக வலைத்தளத்திற்குக் காணொளி பதிவு செய்யும் நோக்கில் நடிப்புக்காக அவ்வாறு செய்ததாக மூன்று இளைஞர்களில் ஒருவர், இன்று வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் தெரிவித்துள்ளார்.
உணவை விரயமாக்கக்கூடாது என்று வலியுறுத்தும் அதே வேளையில் வீடற்றவர்களின் நிலை குறித்து விளக்கவும் அந்தக் காணொளியைத் தாங்கள் பதிவு செய்ததாக அந்த இளைஞர் குறிப்பிடுகிறார்.
அது வெறும் நடிப்புதான். உண்மை அல்ல. நாங்கள் இப்படியொரு காணொளி பதிவு செய்யப் போவதாக அந்த வீடற்ற நபரிடம் முன் கூட்டியே தெரிவித்தோம். அவரும் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அதன் பின்னரே தாங்கள் சாப்பிட்ட கோழித் துண்டுகளின் எலும்புகளை அந்த நபருக்குக் கொடுப்பது போல் நடித்தோம்.
அதன் பின்னர் அந்த வீடற்ற நபருக்கு மூன்று துண்டுகள் கோழி இறைச்சியையும் பர்கர் ஒன்றையும் வழங்கி அவரை மகிழ்ச்சிப்படுத்தினோம்.
எனினும் தங்களின் இந்த நடிப்பு, வெறும் கவன ஈர்ப்பே தவிர உண்மை அல்ல. தங்களின் இந்தச் செயல், பலரின் மனதைப் புண்படுத்தியிருப்பதால் உண்மையிலேயே வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அந்த இளைஞர், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த காணொளியில் தெரிவித்துள்ளார்.








