போர்ட்டிக்சன், செப்டம்பர்.05-
போர்ட்டிக்சன், பாசீர் பஞ்சாங், தஞ்சோங் அகாஸ் மேம்பாலத்தில் நேற்று கார் ஒன்று, பாலத்தை விட்டு விலகி, ஆற்றில் பாய்ந்து, இரு சிறார்கள் நீரில் மூழ்கிய உயிரிழந்த சம்பவத்தில் உயிர் தப்பிய தந்தையையும், தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இரு சிறார்கள் மரணம் தொடர்பில் கொலை விசாரணையின் கீழ் தந்தையும், தாயாரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 11.44 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்த வேளையில் நீரின் மத்தியில் காருக்குள் இருந்து மீட்கப்பட்ட சிறுவனின் 8 வயது தங்கை மூச்சுத் திணறலுக்கு ஆளாகி பின்னர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அந்த சிறார்களின் 46 வயது தந்தையிடமும், 41 வயது தாயாரிடமும், தனித்தனியே போலீசார் விசாரணை நடத்திய போது, இருவரும் அந்த விபத்து குறித்து வழங்கிய வாக்குமூலம் முற்றிலும் முரண்பாடாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
அவ்விருவரும் இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவர்களைத் தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளதாக டத்தோ அச்ஸஃப்னி குறிப்பிட்டார்.
அந்த இரண்டு சிறார்களின் தந்தை என்று சந்தேகிக்கப்படும் ஆடவர், 16 குற்றவியல் சம்பவங்களில் சந்தேகப் பேர்வழியாவார். நான்கு சம்பவங்களுக்குப் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். அவருடைய மனைவிக்கு எந்தவொரு குற்றப்பதிவும் இல்லை.
அவர்கள் பயன்படுத்திய நிசான் தியானா ரக வாகனம், காணாமல் போனதாக போலீஸ் புகார் செய்யப்பட்ட வாகனமாகும் என்று டத்தோ அச்ஸஃப்னி விளக்கினார்.








