கோலாலம்பூர், நவம்பர்.17-
தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃஎப், தனது சந்தாதாரர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு கூடுதல் லாப ஈவு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டில் முதல் ஒன்பது மாதங்கள் வரலாறு காணாத அளவிற்கு முதலீட்டு வருவாயை இபிஃஎப் பதிவு செய்துள்ளதால், அதன் பலாபலன் சந்தாதார்களையும் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டு வருவாயில் இரட்டை இலக்க வளர்ச்சியை இபிஃஎப் பதிவுச் செய்துள்ளதாக அந்த வாரியம் இன்று அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி தொடங்கி, செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் மொத்த முதலீட்டு வருமானத்தை 63.99 பில்லியன் ரிங்கிட்டை இபிஃஎப் பதிவுச் செய்துள்ளது.
இது 2024 இல் பதிவுச் செய்யப்பட்ட 57.57 பில்லியன் ரிங்கிட்டை விட 11 விழுக்காடு அதிகமாகும். இந்த வெற்றிகரமான பதிவின் மூலம் 2025 ஆம் ஆண்டு சந்தாதார்களுக்கான லாப ஈவாக இபிஃஎப் கூடுதல் தொகையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பேங்க் முவாமாலாட் மலேசியா பெர்ஹாட்டின் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமட் அஃப்ஸானிஸாம் அப்துல் ரஷிட் ஆருடம் கூறியுள்ளார்.
முதலீட்டின் மதிப்பையும், தரத்தையும் தீர்மானிப்பதில் இபிஃஎப் தருணம் பார்த்து செயல்படும் நடவடிக்கைகள் ஆக்ககரமான பலனைத் தந்துள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.








