தம்முடைய நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உதவியாளரான இந்திராணி இராமசாமிக்கு 80 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டை வழங்கும்படி சுங்கை சிப்புட் நாடாமன்ற உறுப்பினர் எஸ். கேசவனுக்கு புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கேசவனுக்கு எதிராக இந்திராணி இராமசாமி தொடுத்திருந்த அவதூறு வழக்கு மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த போதிலும் இந்திராணியின் மனுவை அப்பீல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ஶ்ரீ கமாலுடின் முகமட் சைட், கேசவனுக்கு எதிராக இந்திராணி இராமசாமி தொடுத்திருந்த வழக்கில் தகுதிபாடுயிருப்பதாக தீர்ப்பில் தெரிவித்தார்.
கேசவனிடம் தாம் உதவியாளராக பணியாற்றியிருந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் காலகட்டத்தில் அவரிடமிருந்து தாம் பாலியல் தொல்லைகளை எதிர்நோக்கியிருந்ததாக இந்திராணி போலீசில் புகார் செய்து இருந்தார்.
எனினும் அந்த குற்றச்சாட்டை மறுத்த கேசவன், முதலில் தம்மை அணுகியவர் இந்திராணி என்றும், மன உளைச்சலினால் அவதியுறும் இந்திராணி தம்முடைய திருமண வாழ்க்கையை சிதைக்க முயற்சிப்பதாகவும் கேசவன் ஓர் செய்தியாளர் கூட்டத்தின் வாயிலாக விளக்கம் அளித்து இருந்தார்.
எனினும் கேசவனின் இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று கூறி அவருக்கு எதிராக இந்திராணி இந்த அவதூறு வழக்கை தொடுத்து இருந்தார்.








