கோத்தா கினபாலு, செப்டம்ப.17-
மாணவி ஸாரா கைரினா மகாதீரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் பிரேதப் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து அவரது தாயாருக்கு விளக்கப்பட்ட போதிலும், அவர் அதனை மறுத்து விட்டார் என மருத்துவர் ஒருவர் மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
குயின் எலிஸபெத் மருத்துவமனையின் தடயவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் லோகராஜ் ரத்னா, இது குறித்து மரண விசாரணை நீதிமன்றத்தில் இன்று அளித்துள்ள தகவலில், பிரேதப் பரிசோதனைக்கான கோரிக்கையைப் போலீசார் வழங்கவில்லை என்றாலும் கூட, உறவினர்களின் அனுமதியோடு அது கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், ஸாராவின் தாயார் புவான் நொராய்டா லாமாட்டிடம் தான் விளக்கமளித்து அதற்கான அனுமதியைக் கேட்டதாகவும், ஆனால் அவர் அதனை மறுத்து விட்டார் என்றும் டாக்டர் லோகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனை செய்யாமல், ஸாராவின் மரணம் தொடர்பான எந்த ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அவரது குடும்பத்தினரால் எதிர்காலத்தில் பெற முடியாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








