கோலாலம்பூர், ஆகஸ்ட்.26-
தனது கைப்பேசியில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோப் படங்களை வைத்திருந்தது, கழிப்பறையில் ரகசிய கேமராவைப் பொருத்தியது ஆகிய குற்றங்களுக்காக ஆடவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 10 மாதச் சிறை மற்றும் 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
ஒரு வேலையற்ற இளைஞரான 29 வயது P. நக்கீரன் என்ற அந்த நபர், இன்று முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வர வேண்டும் என்று மாஜிஸ்திரேட் அமீரா அப்துல் அஸிஸ் உத்தரவிட்டார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 12 மாதச் சிறைத் தண்டனை விதிப்பதாக அவர் உத்தரவிட்டுள்ளார்.
P. நக்கீரன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு 9.45 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் சன் பெங்கில் ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் கழிப்றையில் ரகசிய கேமராவைப் பொருத்தி வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
நக்கீரன் பிடிபட்டு, அவரின் கைப்பேசியைச் சோதனையிட்ட போது நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோப் படங்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.








