பிறை வாழ் மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகத் தாம் ஏற்றுக்கொண்ட இலக்குகளை நிறைவேற்றுவதில் பெருமிதம் கொள்வதாகப் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்துள்ளார்.
பிறை தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை முழுமையாகப் பூர்த்தி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிறை தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய திருப்பணிகள் குறித்துப் பேசிய அவர், "தொடக்கத்தில் 4 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான மண்டபச் சீரமைப்புத் திட்டமாகத் தொடங்கப்பட்டு, தொழில் அதிபர் டான்ஸ்ரீ ரமேஷ் மற்றும் நன்கொடையாளர்களின் பேராதரவுடன் 17 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பிரம்மாண்ட மறுசீரமைப்புத் திட்டமாக இக்கோயில் திருப்பணி உருவெடுத்துள்ளது" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திருப்பணிகளைத் தாம் நேரில் சென்று அடிக்கடி ஆய்வு செய்ததை நினைவு கூர்ந்த அவர், இன்று ஆலயம் கம்பீரமாகத் தோற்றமளிப்பதைக் காணும்போது தமக்கு மிகுந்த மனநிறைவு கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சமயம் கடந்த நிலையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கவும், பினாங்கு மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தாம் தொடர்ந்து அயராது உழைப்பேன் என டத்தோஸ்ரீ சுந்தராஜு தமது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.













