கோத்தா பாரு, டிசம்பர்.02-
கிளந்தான், தானா மேரா, குவால் பெரிக், கம்போங் பாக்கு என்ற கிராமத்தில் நேற்று மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவர், 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அந்த 63 வயதான ஆடவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி துன் ஃபாயேஸ் ஃபிக்ரி துன் அஸ்ருல் சைனி இன்று அனுமதி வழங்கினார்.
இவ்வழக்கானது கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில், தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் விசாரணை செய்யப்படவுள்ளது.
செலாயாங்கிலுள்ள உணவகத்தில் பணியாற்றி வந்த தனது மனைவிக்கு, வேறு ஒரு காதலன் இருப்பதாகச் சந்தேகித்த அந்த ஆடவர், இந்தக் கொடூரச் செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, போதைப் பொருள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அந்த ஆடவர், அதனைப் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது உறுதியாகியிருப்பதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.








