சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவுள்ள 2026 சுக்மா விளையாட்டுப் போட்டிகளின் இயக்கச் செலவுகள் ஆரம்ப மதிப்பீட்டைக் காட்டிலும் 67 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் மோர்டி பிமோல் தெரிவித்துள்ளார். வீரர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் போட்டியின் தரத்திற்கு எந்தவிதக் குறைவும் ஏற்படாத வகையில், ஏற்கனவே உள்ள வசதிகளை உகந்த முறையில் பயன்படுத்தி இந்தச் செலவுக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
விளையாட்டு கிராமம் ஏதுமின்றிப் பரவலாக்கப்பட்ட முறை பின்பற்றப்படுவதால், சுமார் 12,000 விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் தங்க 640 தங்குமிட வளாகங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதன் மூலம் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் பொருளாதார ரீதியாகப் பயனடையும் என்று குறிப்பிட்ட அவர், வீரர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாநிலக் குழுக்களே நிர்வகிக்கும் என்றும் தெரிவித்தார்.
விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்த இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு சுமார் 1.75 மில்லியன் ரிங்கிட்டை வழங்கும் என்றும், தேசிய விளையாட்டு மன்றத்திற்குச் சொந்தமான வசதிகள் சிறப்பு வாடகைக் கட்டணத்தில் வழங்கப்படும் என்றும் செனட்டர் லாரி அசாப் எழுப்பிய கேள்விக்கு மோர்டி பதிலளித்தார்.








