கோலாலம்பூர், டிசம்பர்.19-
11 வயது மாணவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சமயப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை, புகார் பதிவு செய்யப்பட்டதாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் கம்போங் பண்டானில் செயல்பட்டு வரும் அந்த சமயப் பள்ளியில் பயின்று வரும் அம்மாணவரை, சம்பந்தப்பட்ட ஆசிரியர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கானது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017, பிரிவு 14(d)-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக இதுவரை எந்தவொரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் கூட, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.








