சுங்கை பட்டாணி, ஜூலை.28-
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1.3 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பண மோசடிகளைப் புரிந்ததாக கோலாலம்பூரில் உள்ள ஓர் அனைத்துலகப் பள்ளியின் முன்னாள் பணியாளர் ஒருவர், கெடா, சுங்கை பட்டாணி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
சிரம்பானை சேர்ந்த 56 வயது V. இளங்கோ என்ற அந்த முன்னாள் பணியாளர் இரு வெவ்வேறு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக மொத்தம் 58 மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தமது முன்னாள் பள்ளி நண்பரான 56 வயது T. சந்திர ராஜனை அணுகி, அந்த அனைத்துலகப் பள்ளிக்கு பல்வேறு வசதிகளைச் செய்து கொடுப்பதற்குக் குத்தகைத் திட்டம் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் பெரிய அளவில் லாபத்தை எதிர்பார்க்க முடியும் என்று கூறி, அவரை நம்ப வைத்து, இளங்கோ ஏமாற்றியுள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தனது பால்ய நண்பர் இளங்கோவின் பேச்சை முழுமையாக நம்பிய கெடாவைச் சேர்ந்த ஒரு வர்த்தகரான சந்திர ராஜன், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜுலை மாதம் வரை கட்டம் கட்டமாக பல்வேறு வங்கிக் கணக்குகளின் வாயிலாக மொத்தம் 13 லட்சம் ரிங்கிட்டைப் பட்டுவாடா செய்துள்ளார்.
இறுதியில் நண்பரை நம்பி, தாம் மோசம் போனதாக உணர்ந்த சந்திர ராஜன், இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுச் சிறை, பிரம்படித் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் இளங்கோ குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








