ஈப்போ, ஆகஸ்ட்.04-
நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பே அமைக்கப்பட்டு, இந்தியர்களின் நலனுக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கும் மஇகா, இந்தியர்கள் நலன் மற்றும் அவர்களின் உரிமையை ஓர் அங்குலம் கூட விட்டுக் கொடுக்காது என்று மஇகா தேசிய உதவித் தலைவரும், பேரா மாநில தொடர்புக் குழுத் தலைவருமான டான் ஶ்ரீ எம். இராமசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் மஇகாவின் ஈடுபாடு குறைந்த போதிலும், இந்தியர்களின் நலன் சார்ந்த அம்சங்களான சமூகவியல், கல்வி மற்றும் பொருளாதாரம் ரீதியாக மஇகா ஆற்ற வேண்டிய பணிகளை, எவ்வித இடையூறின்றி தொடர்ந்து செய்து வருகிறது. அரசாங்கத்தில் எந்தவொரு பதவியுமின்றி, தான் சார்ந்துள்ள சமூகத்திற்கு குறிப்பாக கல்வி ரீதியாக ஆற்றி வரும் ஒரே கட்சி என்றால் அது மஇகா - வாகதான் இருக்க முடியும் என்று டான் ஶ்ரீ இராமசாமி குறிப்பிட்டார்.

கடந்த சனிக்கிழமை சுங்கை சிப்புட், துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பேரா மாநில மஇகா தொடர்புக் குழுவின் 79 ஆவது பேராளார் மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் டான் ஶ்ரீ இராமசாமி மேற்கண்டவாறு கூறினார்.
இதுவரை நடந்திராத - முற்றிலும் மாறுபட்ட மாநாடு என்று பேராளர்கள் புகழ்ந்துரைக்கும் அளவிற்கு நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட நிலையில், மாநாட்டை மஇகா தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் ஒரே கட்சி மஇகாதான். இக்கட்சியே இந்தியர்களின் எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கும். குறிப்பாக, தமிழ்மொழி, தமிழ்ப்பள்ளிகள் மற்றும் நமது கலை கலாச்சாரங்களைக் காக்கக்கூடிய ஒரு கட்சி என்றால் அது மஇகாதான். இது போன்ற கட்சி, இருக்கவும் முடியாது, இருக்கப் போவதும் இல்லை. இதுதான் நடப்பு உண்மை மற்றும் வரலாறாகும் என்று டான் ஶ்ரீ இராமசாமி குறிப்பிட்டார்.

பழமை வாய்ந்த கட்சியான மஇகா, தொடர்ந்து வலுப்பெறுவதற்கு அதிகமான இந்திய இளைஞர்களைக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கு பேரா மாநில மஇகா தொடர்பு குழு தற்போது முழு வீச்சில் பாடுபட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில் மஇகாவின் எதிர்காலம், இந்திய சமுதாயத்தின் நலன், அவர்களின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த மஇகா தயாராக உள்ளது என்று கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் முன் வைத்துள்ள பரிந்துரையைப் பேரா மாநில மஇகா தொடர்புக்குழு முழுமையாக வரவேற்பதாக டான் ஶ்ரீ இராமசாமி குறிப்பிட்டார்.
இந்திய சமுதாயத்தைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டுமானால் அது கல்வியினால் மட்டுமே முடியும். இதன் காரணமாக இந்திய மாணவர்களுக்காக கல்வி நலன் சார்ந்த அம்சங்களுக்கு மஇகா தற்போது அதீத முன்னுரிமையை வழங்கி வருவதாக டான் ஶ்ரீ இராமசாமி குறிப்பிட்டார்.
இந்திய சமுதாயத்தில் கல்வியில் சிறந்த அடைவு நிலையைக் கொண்ட மாணவர்களுக்கு ஏய்ம்ஸ் பல்லைக்கழகத்தில் உயர்க் கல்வி வாய்ப்பு மற்றும் குறைந்த அடைவு நிலையைக் கொண்ட மாணவர்களுக்கு டேஃப் கல்லூரியில் திவெட் போன்ற தொழில்நுட்பப் பயிற்சி சார்ந்த கல்வி வாய்ப்பு என இரு திட்டங்களுக்கு மஇகா முக்கியத்துவம் அளித்து வருவதாக டான் ஶ்ரீ இராமசாமி தெரிவித்தார்.








