மலாக்கா, ஜூலை.13-
மலாக்கா மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்ட தாதியர்களுக்கும், சுமார் 30 மருத்துவ அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை நிலவுவதால், பொது சுகாதார அமைப்புக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்ய சுகாதார அமைச்சை மலாக்கா மாநில சுகாதார, மனிதவள, ஒற்றுமைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்வே ஹீ செம் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலை தற்போதுள்ள மருத்துவ ஊழியர்களுக்கு அதிகப் பணிச் சுமையை ஏற்படுத்துவதாகவும், சிலர் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். சிங்கப்பூரில் மலேசிய மருத்துவர்களுக்குக் கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புச் சலுகைகள் இருந்தாலும், மலாக்காவில் அதன் தாக்கம் கடுமையாக இல்லை. எனினும் உள்ளூர் நிபுணர்களின் பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக உள்ளது.








