கோத்தா பாரு, செப்டம்பர்.23-
சிங்கப்பூரிலிருந்து ஆடம்பரக் கார்களைக் கடத்தி வந்து, சந்தை விலையை விட 40 விழுக்காட்டிற்கும் குறைவாக விற்பனை செய்து வந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு வட்டாரத்தில் அரச மலேசிய சுங்கத்துறையின் கிளந்தான் பிரிவு, இந்த கடத்தலை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
இந்தக் கடத்தல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் கடந்த மே 18 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதி வரை சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கிளந்தான் மாநில இயக்குநர் வான் ஜாமால் அப்துல் சலாம் வான் லோங் தெரிவித்தார்.
இந்தச் சோதனை நடவடிக்கையின் வழி சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்டவை என்று நம்பப்படும் 1.46 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள வாகனங்களைத் தாங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இவற்றுக்கு செலுத்த வேண்டிய வரியானது 2.75 மில்லியன் ரிங்கிட்டாகும் என்று அவர் விளக்கினார்.








