கோலாலம்பூர், ஜூலை.16-
கோலாலம்பூர், பங்சாரில் உள்ள ஒரு கட்டுமானத் தளத்தில் வேலையாட்கள் மத்தியில் நிகழ்ந்த கைகலப்பில் ஒன்பது அந்நிய நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைகலப்பு தொடர்பான காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவலாக வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சண்டையில் ஈடுபட்ட அந்நிய நாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ஃபிர்டாவுஸ் முஸ்தபா கமால் தெரிவித்தார்.
இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி, நிகழ்ந்த இந்த தகராறு தொடர்பாக நேற்று மாலை 4.53 மணியளவில் போலீசார் புகார் பெற்றுள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த ஒன்பது பேரும் விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








