செர்டாங், செப்டம்பர்.03-
சிலாங்கூர், பாத்தாங் காலியில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி காணாமல் போன ஆகாயப்படை வீரர் முகமட் அம்மார் முகமட் அரிஃபின் இன்று பிற்பகல் அம்பாங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் மாயமானது தொடர்பில் எந்த ஒரு குற்றச் செயல்களோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான காரணங்களோ இல்லை என்பதைப் போலீசார் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.
இது குறித்து செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் ஃபாரிட் அஹ்மாட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த வீரர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சிலாங்கூர் பாத்தாங் காலி சுங்கை கெடொண்டோங்கில் தனது சக வீரர்கள் மூவருடன் குளிக்கச் சென்ற போது 27 வயதான முகமட் அரிஃபின் மாயமானதாக நம்பப்பட்டது. இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக அவரைத் தேடும் பணி நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.








