நெகிரி செம்பிலான், கோலபிலாவில் உள்ள 14 தகவல் தொடர்பு கோபுரங்களின் உபகரணங்கள் திருடப்பட்டதைத் தொடர்ந்து அவை வெற்றிகரமாகச் சீரமைக்கப்பட்டுள்ளதாக மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC தெரிவித்துள்ளது.
புக்கிட் பிலாவில் உள்ள ஒரு கோபுரத்தில் ரேடியோ மற்றும் பேஸ்பேண்ட் போன்ற முக்கியக் கருவிகள் திருடப்பட்டதால், அதைச் சார்ந்திருந்த மற்ற 13 கோபுரங்களின் சேவையும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக சுமார் 1,668 பயனர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது CelcomDigi- யும், MCMC ஆணையமும் இணைந்து மேற்கொண்ட துரித நடவடிக்கையால் 2G மற்றும் 4G சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
தகவல் தொடர்பு வசதிகளைச் சேதப்படுத்துவது கடுமையான குற்றம் என்றும், இதில் ஈடுபடுவோருக்கு 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும் ஆணையம் எச்சரித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை உடனடியாகப் போலீசாரிடம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.








