கோலாலம்பூர், அக்டோபர்.12-
மலாக்காவில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றம் தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. காவல் துறையுடனும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுடனும் இணைந்து, இந்தத் தவறான காணொளி உள்ளடக்கங்களைத் தடுப்பதற்கும் நீக்குவதற்கும் எம்சிஎம்சி நெருக்கமாகச் செயல்படுகிறது. இவை விசாரணைக்குத் தடையை ஏற்படுத்தலாம் என்பதாலும், பாதிக்கப்பட்டவர்களின் உணர்ச்சி நலனைப் பாதிக்கலாம் என்பதாலும் இந்தத் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வகையான காணொலிகள் சட்டப்படி குற்றமாகும் என்று எம்சிஎம்சி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய உள்ளடக்கங்களைப் பரப்புவது, தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233-இன் கீழ் குற்றமாகும் என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது. எனவே, இத்தகைய உள்ளடக்கங்களைப் பகிர வேண்டாம் என்றும், பொதுமக்களின் இணைய நடத்தைச் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் எம்சிஎம்சி வலியுறுத்தியுள்ளது.








