அண்டை வீட்டாரின் பிட்புல் வகை வளர்ப்பு நாய் கடித்ததில் பலத்த முகக் காயங்களுக்கு உள்ளான சிறுமிக்கு 5 லட்சத்து 17 ஆயிரத்து 643 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஜோகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி ஜோகூர், எண்டாவ், தாமான் பெர்மாத்தாவில் இந்தச் சம்பவம் நடந்த போது அச்சிறுமிக்கு 10 வயதே ஆகியிருந்தது.
இந்நிலையில், நீதித்துறை ஆணையர் நோராடுரா ஹம்ஸா, நாயின் உரிமையாளரான மீனவர் லிம் சீர் ஹவை இச்சம்பவத்துக்கு 100 சதவீதம் பொறுப்பானவர் எனத் தீர்ப்பளித்தார்.
நாய் கடித்ததில் சிறுமியின் முகத்தில் ஆழமான காயங்கள், எலும்பு முறிவுகள் மற்றும் கண், கண்ணீர் நாளம் தொடர்பான காயங்கள் ஏற்பட்டன. இதற்காக 8 மணி நேர அறுவை சிகிச்சையும், பின்னர் பல்வேறு மறுசீரமைப்பு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, அச்சிறுமி அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைந்ததாகவும், நாயைத் தூண்டியதாகவும் லிம் சீர் ஹாவ் கூறிய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், நாய் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு மற்றும் அவரது மனைவியின் மன உளைச்சல் தொடர்பான எதிர்வழக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, நாயை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறிய குற்றத்துக்காக மெர்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட லிம்மிற்கு மொத்தம் 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








