லான்ஸ் கொபெரல் அந்தஸ்தை கொண்ட போலீஸ்காரரை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷெய்லா ஷரின் ஸ்தீவனை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் நேற்று அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதல் செய்துள்ளது.
காப்பரல் அப்துல் அரிஃப் ஃபர்ஹான் அப்துல் ரசாக் என்ற போலீஸ்காரரை அவமதித்தாக குற்றஞ்சாட்டப்பட்ட இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஷீலாவை கடந்த ஜுன் மாதம் 26 ஆம் தேதி செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படாமல் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தது.
தம்மை குற்றச்சாட்டிலிருந்து மட்டுமல்ல. வழக்கிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரி இன்ஸ்பெக்டர் ஷீலா, செய்து கொண்ட மேல்முறையீட்டை ஷா ஆலாம் உயர் நீதிமன்ற நீதித்துறை ஆணையர் நோர்ஷரிடா அவாங் அனுமதித்ததுடன் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பு அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ஷீலாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டில் குறைபாடுகள் இருப்பதாக நீதித்துறை ஆணையர் தமது தீர்ப்பில் தெரிவித்தார். குறிப்பாக குற்றச்சாட்டுகளின் தன்மைகள் ஒரே மாதிரியாக உள்ளன என்று நீதித்துறை ஆணையர் தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
எனினும் போலீஸ்காரரை அவமதித்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து 38 வயதுடைய அந்த இளம் உயர் போலீஸ் அதிகாரி விடுதலை செய்யப்பட்டாலும் அவர் மேலும் இரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார் என்பதை அவரின் வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் உறுதிபடுத்தினார்.
குறிப்பாக, போலீஸ்காரருடன் இன்ஸ்பெக்டர் ஷீலா வாக்கு வாதத்தில் ஈடுபடுவதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் ஸ்ரீ கோம்பாக்கை சேர்ந்த உணவு அங்காடிக்கடைக்கார உரிமையாளர் எம். செல்வக்குமாரியை அச்சுறுத்தியது , அவர்களின் வாக்குவாதத்தை தடுக்க வந்த ஒரு வழக்கறிஞரான P. தனேஸ்வரனை அவமதித்தது ஆகிய மேலும் இரு குற்றச்சாட்டுகளை அந்த உயர் போலீஸ் அதிகாரி எதிர்நோக்கியுள்ளார்.








