கோலாலம்பூர், டிசம்பர்.29-
பெரியளவிலான பணப்புழக்கம் மற்றும் ஊழல் புகார்கள் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், தற்போது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று திங்கட்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த இராணுவ அதிகாரி அனுமதிக்கப்பட்ட அதே நாளில், எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க அவர் நேரில் ஆஜராக வேண்டியிருந்தது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை.
இராணுவ கொள்முதல் திட்டங்களில் முறைகேடு செய்து, அந்த அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் அதிகளவிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே ஆறு வங்கிக் கணக்குகளை எஸ்பிஆர்எம் முடக்கியுள்ளது.








