கோலாலம்பூர், டிசம்பர்.19-
கிள்ளான், கம்போங் ஜாலான் பாப்பான் குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசிய சோசலிசக் கட்சியான பிஎஸ்எம் பிரதிநிதிகள், மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமிடம் இன்று மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்தனர்.
பிஎஸ்எம் கட்சியின் பொதுச் செயலாளர் எம். சிவரஞ்சனி மற்றும் குடியிருப்பாளர்களின் பிரதிநிதி தியோ ஆ குவாட் ஆகியோர் இந்த மகஜரைச் சுஹாகாம் ஆணையர் அப்துல் காதிர் ஜெய்லானி இஸ்மாயிலிடம் வழங்கினர்.
கடந்த நவம்பர் 10 முதல் 14 ஆம் தேதி வரை நடந்த வீடு உடைப்பு நடவடிக்கைகளின் போது, குடியிருப்பாளர்களின் வீட்டுவசதி உரிமைகள் மீறப்பட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
போலீசார் அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தியதாகவும், மேம்பாட்டாளர் மற்றும் போலீசாருக்கு இடையே நலன் சார்ந்த முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
வெறுமனே காலியாக இருந்த வீடுகளை மட்டும் இடிப்பதாகக் கூறி விட்டு, மக்கள் வசித்து வந்த 29 வீடுகள் இடிக்கப்பட்டதாகப் குடியிருப்பாளர்கள் தங்கள் வேதனையைத் தெரிவித்தனர்.
இந்த மகஜரைப் பெற்றுக் கொண்ட சுகாஹாம் ஆணையர் அப்துல் காதிர் ஜெய்லானி, இந்தச் சட்டவிரோத வெளியேற்றம் மற்றும் வீடு உடைப்பு குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
மேலும் இந்த விசாரணையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனமான Melati Ehsan Consolidated Sdn Bhd ஆகியவையும் உள்ளடக்கப்படும் என்பதையும் அப்துல் காதிர் ஜெய்லானி தெளிவுபடுத்தினார்.








