ஈப்போ, அக்டோபர்.03-
வயோதிகத் தம்பதியர் ஈப்போ, டேசா லாங் இண்டாவில் உள்ள தங்கள் வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டேசா லாங்கில் உள்ள ஒரு வீட்டில் வயோதிகத் தம்பதியர், அசைவின்றி கிடப்பதாக நேற்று காலையில் போலீசார் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.
போலீசார் வீட்டைச் சோதனையிட்ட போது வரவேற்பு அறையில் கதவுக்கு அருகில் முதியவரின் உடலும், வீட்டின் அறையின் படிக்கட்டில் மூதாட்டியின் உடலும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முதியவர் எந்தவொரு கடும் நோயிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால், அவரின் துணைவியார், கடந்த ஐந்து ஆண்டு காலமாக பார்க்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாத நோயினால் அவதியுற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
வீட்டில் பலவந்தம் நடந்ததற்கான எந்தவோர் அறிகுறியும் தென்படவில்லை. இருவரின் சடலங்களும், ஈப்போ, ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக ஏசிபி அபாங் ஸைனால் குறிப்பிட்டார்.








