குவாந்தான், ஜனவரி.20-
கிராமப்புறங்களில் உள்ள செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, பகாங் மாநில கால்நடை சேவைகள் துறையான DVS, முழு வசதிகளுடன் கூடிய நடமாடும் கால்நடை மருத்துவமனையை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 'கம்போங்கூ செரியா’ திட்டத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கிய இந்த மருத்துவமனையில், மருத்துவ ஆலோசனை, அறுவை சிகிச்சை, மயக்க மருந்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இச்சேவைகளுக்காக பிரத்யேக அறைகள், விலங்குகளைத் தடுத்து வைப்பதற்கான கூண்டுகள், அத்துடன் பதிவு மற்றும் காத்திருப்புப் பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பூனைகள், நாய்கள், முயல்கள் மற்றும் ஹேம்ஸ்டர்கள் போன்ற விலங்குகளுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக, இந்த நடமாடும் மருத்துவமனையானது, ஒவ்வொரு மாதமும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் என பகாங் மாநில DVS இயக்குநர் நோர்ஹலிஸா அப்துல் ஹாலிம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் போடுதல், குடல் புழு நீக்கம் செய்தல் ஆகியவற்றுடன் அவசர அறுவை சிகிச்சைகளும் இச்சேவைகளில் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








