கோலாலம்பூர், ஆகஸ்ட்.11-
சமூக வலைத்தளங்கள் உட்பட எந்த ரூபத்திலும் அடுத்தவரைப் பகடி வதை அல்லது இழிவுப்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றவர்கள், குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டால் தலா 100 ரிங்கிட் அபராதம் விதிக்கும் நிலை மாறி, தற்போது கூடியபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அதிகபட்ச தொகை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.
பகடி வதை மீதான 2025 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத் திருத்த விதியை பிரதமர் துறையின் சட்டத் சீர்த்திருத்தங்களுக்கான அமைச்சு அறிமுகப்படுத்தியிருப்பதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்தார்.
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி மாமன்னரின் அங்கீகாரத்தைப் பெற்ற அந்த சட்டத் திருத்தம், கடந்த மார்ச் 7 ஆம் தேதி அரசாங்கப் பதிவேட்டில் இடம் பெற்றது. அதன் அமலாக்கத் தேதி அமைச்சர் மூலம் அறிவிக்கப்படும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.
பகடி வதையினால் பாதிக்கப்படும் நபர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டால் அல்லது தற்கொலை செய்து கொண்டால் அல்லது சம்பந்தப்பட்டவரின் அடையாளம், பொய்யான தகவலுக்குப் பயன்படுத்தப்படுமானால் எவ்விதச் சட்ட சிக்கலின்றி 2025 ஆம் ஆண்டு பகடி வதைச் சட்டம் குற்றவாளிகள் மீது நேரடியாகப் பாயும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
சமூக வலைத்தளங்களில் பிறரைக் கண்மூடித்தமானப் பகடி வதை செய்வது, நிந்திப்பது, இடையூறு விளைவிப்பது முதலிய சம்பவங்களைய்ஹ் தடுக்க இந்த புதியச் சட்டம் நிவாரணம் அளிக்கும் என்று அஸாலினா நம்பிக்கை தெரிவித்தார்.








