Oct 18, 2025
Thisaigal NewsYouTube
பாலியல் சுரண்டல் நடவடிக்கை: போலீஸ்காரர் மற்றும் நான்கு இந்தியப் பிரஜைகள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலியல் சுரண்டல் நடவடிக்கை: போலீஸ்காரர் மற்றும் நான்கு இந்தியப் பிரஜைகள் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.17-

பாலியல் சுரண்டல் நடவடிக்கைக்காக 7 வெளிநாட்டுப் பெண்களைக் கடத்தி வந்ததாக அரச மலேசிய போலீஸ் படையின் கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் மற்றும் இந்தியப் பிரஜைகளான மூன்று பெண்கள் உட்பட நால்வர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

ஒரு போலீஸ்காரரான 34 வயது காப்ரல் எஸ். கோபிநாத், இந்தியப் பிரஜைகளான 21 வயது மதன், 57 வயது தனலெட்சுமி, 44 வயது வசந்தி சண்முகம் மற்றும் 25 வயது முனிஸ்வரி ஆகிய ஐவரும் கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 பெண்களைச் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையின் போது போலீஸ்காரர் காப்ரல் கோபிநாத் உட்பட ஐவரும் பிடிபட்டனர்.

வெளிநாட்டுப் பெண்களைக் கடத்தி வந்து அவர்களைப் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி அதன் வாயிலாக பணத்தை ஈட்டி வந்ததாக காப்ரல் கோபிநாத் உட்பட ஐவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் 2007 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

போலீஸ்காரர் கோபிநாத், ஒரு நபர் உத்தரவாதத்துடன் 10 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் இதர நால்வர், இந்தியப் பிரஜைகள் என்பதால் அவர்களுக்கு ஜாமீன் அனுமதிக்கப்படக்கூடாது என்று பிராசிகியூஷன் தரப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

எனினும் தனலெட்சுமியும், வசந்தியும் இரண்டு நபர்கள் உத்தரவாதத்தின் பேரில் தலா 20 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேளையில் மதன் மற்றும் முனிஸ்வரி ஆகியோருக்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டது.

Related News