கோலாலம்பூர், நவம்பர்.19-
மலேசியா இன்னும் நிகரக் கடன் வழங்கும் நாடு என்ற தனது நிலையைத் தக்க வைத்திருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசிய பெரு நிறுவனங்களும், நிதி நிறுவனங்களும் வைத்திருக்கும் கணிசமான கையிருப்பு அல்லாத வெளிநாட்டு நாணயச் சொத்துகள் மற்றும் நாட்டின் வலுவான வெளிப்புற பொருளாதார நிலை தான் இதற்குக் காரணம் என்றும் அன்வார் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
2025-ஆம் ஆண்டு, மூன்றாம் காலாண்டின் இறுதியில் மலேசியாவின் நிகர சர்வதேச முதலீட்டு நிலையான NIIP-ஆனது, 77.3 பில்லியன் ரிங்கிட் ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான GDP-யின் 3.9 விழுக்காட்டிற்குச் சமமானது என்றும் அன்வார் தெரிவித்தார்.
இந்த நிலையானது மலேசியா இன்னும் நிகர கடன் வழங்கும் நாடாக உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுக் கடன்களை நிர்வகிக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார், நாட்டின், வெளிநாட்டுக் கடன்களைச் சந்திக்கும் திறனும், குறுகிய காலத்தில் அக்கடன்களைத் திருப்பிச் செலுத்தும் திறனும் “இன்னமும் வலுவாகவே உள்ளது” என வலியுறுத்தினார்.








