கோத்தா திங்கி, ஜூலை.13-
மலேசியாவின் மிக உயரிய நீதித்துறை பதவிகளுக்கான நியமனங்கள் குறித்து அவசரம் காட்ட வேண்டாம் என்று அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜூலை 15 முதல் 17 வரை நடைபெறவுள்ள 269வது மலாய் ஆட்சியாளர்கள் மாநாடு வரை காத்திருக்குமாறு பிரதமர் துறையின் சட்டம், நிறுவன சீர்திருத்தத்திற்கான அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 122Bயின் படி, இந்த நியமன செயல்முறையை நிர்ணயிப்பதால், பிரதமர் மலாய் ஆட்சியாளர்களோடு கலந்தாலோசித்த பிறகு மாமன்னரின் ஆலோசனைப்படி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவிகளின் காலியிடங்கள் குறித்து விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.








