புக்கிட் மெர்தாஜாம், செப்டம்பர்.03-
கடந்த மாதம் தனது காதலியைக் கொன்றதாக ரொஹிங்யா ஆடவர் ஒருவருக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த குற்றச்சாட்டை புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒத்தி வைத்துள்ளது.
குற்றச்சாட்டின் தன்மையைப் புரிந்து கொள்ள தனக்கு மொழிப் பெயர்ப்பாளர் உதவி தேவை என்று 52 வயது அப்துல் காடீர் அப்துல் ரஹ்மான் என்ற அந்த ரொஹிங்யா நபர் செய்து கொண்ட விண்ணப்பத்தைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடா முகமட் ஆகிட், அந்த நபருக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதை ஒத்தி வைத்துள்ளது.
மொழிப் பெயர்ப்பாளர் சேவையைப் பெறுவதற்கு ஏதுவாக வரும் அக்டோபர் முதல் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நோர் ஷாகிலா டஹாரி ஆஜராகியிருந்த வேளையில் ரொஹிங்யா நபர் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. அந்த நபருக்கு நீதிமன்றம் ஜாமீன் அனுமதிக்கவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் தனது காதலியான மியன்மார் நாட்டைச் சேர்ந்த ஆ மே என்பவரைக் கொலை செய்ததாக அகதிகளுக்கான ஐ.நா. அட்டையை வைத்திருக்கும் அப்துல் காடீர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.








