நாட்டின் வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், சம்பந்தப்பட்ட பள்ளிகளைத் தற்காலிகமாக மூடத் தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடும் வெப்பம் நிலவும் சூழலில் மாணவர்களின் நலனைக் கருதி, 2023-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி இந்தப் பள்ளிகள் மூடப்படலாம் எனத் துணைக் கல்வி அமைச்சர் வொங் கா வோ தெரிவித்தார்.
வெப்பநிலை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருந்தால், குறுந்தூர ஓட்டம் , முகாம், அணிவகுப்புப் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று துணை அமைச்சர் வலியுறுத்தினார்.
அனைத்துப் பள்ளித் தலைமைகளும், மாவட்டக் கல்வி அலுவலகங்களும் இந்தச் சூழலை அணுக்கமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வொங் கா வோ அறிவுறுத்தினார்.
இன்று பேரா கோப்பேங் தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்த துணை அமைச்சர், நாட்டில் நிலவும் வெப்ப அலையைச் சமாளிக்க மாநிலக் கல்வித் துறைகளுக்கும் பள்ளிகளுக்கும் போதிய அனுபவம் இருப்பதாகத் தெரிவித்தார்.








