Aug 21, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மலை கேபிள் கார் திட்டப் பணிகள் 32 சதவீதத்தை எட்டியுள்ளன; 2027 நிறைவடையும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மலை கேபிள் கார் திட்டப் பணிகள் 32 சதவீதத்தை எட்டியுள்ளன; 2027 நிறைவடையும்

Share:

பினாங்கில் கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 32 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் எஞ்சிய கட்டுமானப் பணிகள் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் அனைத்து நிலத்தடி பணிகளும் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, கேபிள் கார் திட்டம் தற்போது மேம்பட்ட கட்டுமானக் கட்டத்தை எட்டியுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற திட்டக் கண்காணிப்பு பயணத்தின்போது பேசிய அவர், கேபிள் கார் திட்டத்தின் முன்னேற்றம் திருப்திகரமாக உள்ளதாகவும், தற்போது மூன்றாவது கோபுரம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அடுத்தாண்டு இறுதி காலாண்டில் கேபில் கார் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தளப் பணிகள் தொடங்கிய இந்தத் திட்டம், ஆரம்ப கட்டத்தில் சில தாமதங்களை எதிர்கொண்ட போதிலும், பினாங்கு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நிலத்தடி பணிகளின்போது பல்வேறு சவால்கள் ஏற்பட்டதாகக் கூறிய சாவ், தற்போது அனைத்து நிலத்தடி பணிகளும் நிறைவடைந்துள்ளதால் திட்டத்தின் முன்னேற்றம் மேலும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

பினாங்கு மலையின் பாறைகள் நிறைந்த நில அமைப்பு மற்றும் கடுமையான தொழில்நுட்பத் தேவைகள் காரணமாக நிலத்தடி கட்டுமானப் பணிகள் மிகவும் சவாலானதாக இருந்ததாக அவர் கூறினார்.

ஹார்தாசுமா செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கபடும் இந்த திட்டமானது பினாங்கு தாவரவியல் பூங்காவையும் பினாங்கு மலை உச்சியையும் இணைக்கும் பொருட்டு 2.73 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த கேபிள் கார் பாதை அமைக்கப்பட்டடுள்ளது.

கார்டன், டர்ன் மற்றும் ஹில்டாப் என மூன்று நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், மொத்தம் 50 கேபிள் கார் பெட்டிகள் இயக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 1,400 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் இந்தச் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related News