பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.06-
ஜசெக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங் சம்பந்தப்பட்ட பினாங்கு கடலடி சுரங்கப் பாதைத் திட்ட லஞ்ச ஊழல் வழக்கில் அரசு தரப்பின் முக்கிய சாட்சி ஒருவர், பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் தாக்கப்பட்ட சம்பவத்தை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாஃபார் உறுதிப்படுத்தினார்.
எனினும் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கும் எவ்விதத் தொடர்பில்லை என்பதை அவர் உறுதிச் செய்தார்.
பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள அந்த முக்கிய சாட்சியின் இல்லத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் பாராங்கை ஆயுதமாக ஏந்திய சந்தேகப் பேர்வழிகள் முகமூடி அணிந்துள்ளனர்.
வீட்டின் இரும்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த விலை உயர்ந்தப் பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
தாங்கள் கொள்ளையடித்தப் பொருட்களுடன் கொள்ளையர்கள் அனைவரும் வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பாதை வழியாக தப்பிச் சென்றுள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்துள்ளார்.








