ஜன.17
புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில டிஏபி தலைவருமான டத்தோ ஙெ கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர், இன்று ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று மன்ஜோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் நோர்டின் அப்துல்லா தெரிவித்தார்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் அந்த நபர் தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று அவர் மேலும் கூறினார். சம்பந்தப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் ஆகியவை பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டன. அதேவேளையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பாக மேலும் தகவலை கொண்டு இருப்பர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலையில் பேரா,மன்ஜோங் அருகில் ஆயிர் தாவார்- ரில் உள்ள ஙெ கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிடிபட்டுள்ள நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு சட்டத்துறை முன்னாள் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் கேட்டுக்கொண்டு இருந்தார்.








