மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களைத் தொடர்ந்து, எரிபொருள் விலையேற்றத்தைச் சந்தித்த ஒரே நாடு மலேசியா மட்டுமே என்று உலமா ஒருவர் முன்வைத்த கூற்றை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
அத்தகைய கூற்றுகள் “துல்லியமற்றவை”, “மேலோட்டமானவை” மற்றும் பொதுமக்களைக் குழப்பக்கூடியவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சம்பந்தப்பட்ட உலமாவின் பெயரை அன்வார் குறிப்பிடவில்லை.
அண்மையில் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்-ஐத் தான், அன்வார் மறைமுகமாக சாடுவதாக தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக இந்த விவகாரத்தில் கருத்துரைத்த ஹாடி, இத்தகைய விலை உயர்வு சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் அமல்படுத்தப்படவில்லை என்றும், இதற்குப் போதுமான வலுவான அடிப்படை காரணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது உள்ளிட்ட மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பதற்றங்களுடன் எரிபொருள் விலை உயர்வை தொடர்பு படுத்துவது, தீபகற்ப மலேசியாவிற்கான டீசல் விலை உயர்வை நியாயப்படுத்துவதற்கான ஒரு வழியாக அமையக்கூடாது என்று மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.








