கோலாலம்பூர், அக்டோபர்.26-
47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்காகப் பன்னாட்டுக் குழுவினருக்குத் துணையாகச் சென்று கொண்டிருந்த போக்குவரத்து காவற்படை அதிகாரி ஒருவர், திடீரெனப் பாதையை மாற்றியதால், விபத்தில் சிக்கி காயமடைந்தார். இன்று காலை 11.45 மணியளவில் ஜாலான் துன் ரஸாக்கில் நடந்த இந்தச் சம்பவத்தில், 25 வயதான லான்ஸ் கோப்பரல் நிலையிலான அந்தக் காவற்படை அதிகாரிக்கு இடது மணிக்கட்டில் எலும்பு முறிவும் உதட்டில் காயமும் ஏற்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் யுஸ்ரி ஹசாம் பஸ்ரி தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய பெரோடுவா அல்ஸா வாகனத்தின் ஓட்டுநர் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறத்திற்குத் திடீரெனத் திரும்பியதே விபத்திற்குக் காரணம் என்றும், பொதுமக்கள் மாநாட்டுக் குழுவினரின் பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.








