தங்காக், ஜனவரி.11-
ஜோகூர், தங்காக் பகுதியில் 53 வயது பெண் ஒருவர் ‘A.D Evoque’ எனும் போலி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, கண் இமைக்கும் நேரத்தில் தனது உழைப்பின் ஊதியமான 23,506 ரிங்கிட் பணத்தை இழந்து தவித்து வருகிறார். குறுகிய காலத்தில் பெரும் ஆதாயம் தருவதாகக் கூறி ஆசை காட்டிய மோசடி கும்பல், அந்தப் பெண்ணை நம்ப வைத்து ஒன்பது தவணைகளில் ஐந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் சொல்லி நூதனமாக ஏமாற்றியுள்ளதாக தங்காக் மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரொஸ்லான் முஹமட் தாலிப் தெரிவித்தார்.
காவற்படையின் ‘Semak Mule’ இணையதளத்தில் ஏற்கனவே “ஆபத்தானது” என எச்சரிக்கப்பட்டிருந்த கணக்குகளிலேயே இந்தப் பெண் பணத்தைச் செலுத்தியுள்ளதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக ஆதாயம் தரும் முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், எந்நேரமும் 997 என்ற தேசிய மோசடி தடுப்பு மையமான NSRCஐத் தொடர்பு கொள்ளலாம் என்றும் ரொஸ்லான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








