புத்ராஜெயா, ஜூலை.14-
நீதித்துறையின் மாண்பைக் காப்பதற்கு இன்று புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட வழக்கறிஞர்கள் பேரணி, முழு வெற்றியைத் தந்துள்ளது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்தப் பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பெரியளவில் திரண்டு, வழக்கறிஞர் மன்றம் முன்வைத்துள்ள 6 அம்சக் கோரிக்கைகளுக்கு முழு ஆதரவை நல்கியதாக மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வஹாப் தெரிவித்தார்.
நீதித்துறைக் கட்டடத்திலிருந்து பிரதமர் துறையின் சட்டத்துறைக் கட்டடத்திற்கு சுமார் 2.6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மகஜர் ஒன்றைச் சமர்ப்பித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மகஜர் ஒப்படைப்பு நிகழ்வில் தாமும் இதர ஏழு பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக அவர் விளக்கினார்.
நீதிபதிகள் நியமன ஆணையத்தின் கூட்டக் குறிப்பு கசிந்தது, அரச விசாரணை அணையம் அமைப்பது, காலியான நீதிபதிகள் பதவிகள் நிரப்பப்படுவது, தலைமை நீதிபதியின் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை முதலிய விவகாரங்களை வலியுறுத்தி மகஜர் சமர்ப்பிக்கப்பட்டதாக முகமட் எஸ்ரி குறிப்பிட்டார்.
எனினும் இதே போன்று மற்றொரு பேரணி நடத்துவதற்குத் தாங்கள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதை அவர் மறுத்துள்ளார்.








