மந்தின், ஜனவரி.06-
கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, நெகிரி செம்பிலான் மாநிலம் மந்தின் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், கத்திக் குத்துக் காயங்களுடன் ஆடவர் கொலையுண்டு கிடந்த சம்பவத்தில், முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கும் நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், முகக்கவசமும், ஹூடியும் அணிந்த ஆடவர் ஒருவர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், அப்பகுதியில் உலாவியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக நீலாய் போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்துள்ளார்.
கொலையுண்ட நபர் குறித்து, அங்குள்ள பாதுகாவலரிடம் சந்தேக நபர் விசாரித்து விட்டு சென்றதாகவும் ஜொஹாரி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கொலையுண்ட நபருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த இருவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரின் தடுப்புக் காவலை நீட்டிக்க, நீதிமன்றத்தில் இன்று போலீசார் கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
30 வயதான கொலையுண்ட நபர், தலை, கழுத்து, மார்பு என உடலில் 12 இடங்களில் கத்துக் குத்துக் காயங்களுடன் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








