கூலிம், நவம்பர்.24-
கெடா, கூலிம், பாடாங் மெஹாவில் உள்ள எம்பிஐ டெசாகு எனும் இடத்தில் கடையொன்றில் களவாடியதாக நம்பப்படும் 4 இந்திய ஆடவர்களில் மூவர் பிடிபட்டனர். மேலும் ஒருவர் தப்பியோடி விட்டதாக போலீஸ் துறை தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பில் திரு என்று அழைக்கப்படும் ஓர் ஆடவரைப் போலீஸ் தேடி வருவதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஹஜி ஸுல்கிஃப்லி அஸிஸான் தெரிவித்தார்.
பிடிபட்டவர்களில் ஒருவருக்கு 14 குற்றப்பதிவுகள் இருப்பதாக அவர் கூறினார்.
கடந்த நவம்பர் 22 ஆம் தேதி அதிகாலை 6.30 மணி அளவில் எம்பிஐ டெசாகு கடைப் பகுதியில் 45 வயது பாதுகாவலர் ஒருவர், அவ்விடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த வேளையில் "PARIS DE WINE " எனும் கட்டிடத்தின் பின்புறத்தில் சாம்பல் நிற ஹொண்டா சிவிக் வாகனம் ஒன்று சந்தேகத்துக்குரிய நிலையில் நிறுத்தப்பட்டதைக் கண்டுள்ளார் .
அவ்வாகனத்திலிருந்து 4 இந்திய ஆடவர்கள் ஆயுதங்களுடன் இறங்கி கடையின் பின்புறக் கதவை உடைந்துள்ளனர். அப்போது பாதுகாவலர் தனது நண்பர்களை உதவிக்கு அழைத்து கடைப் பகுதிக்குள் நுழைந்த நால்வரையும் பிடிக்க முயற்சித்துள்ளார். அதே வேளையில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அவ்விடத்திற்கு விரைந்த போலீஸ் துறையினர் மூவரையும் வளைத்துப் பிடித்துள்ளனர். ஒருவர் அவ்விடத்திலிருந்து தப்பியோடிவிட்டார் என்று சுப்ரிண்டெண்டன் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
பிடிபட்ட 24 க்கும் 32 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் இருவர், போதைப் பொருள் உட்கொண்டிருப்பது தெரிய வந்தது. இவர்கள் குற்றவியல் சட்டம் 451 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று சுப்ரிண்டெண்டன் ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.








