ஷா ஆலாமில் 11 வாகனங்கள் மீது லாரியை மோதச் செய்து, நான்கு பேர் காயமடையக் காரணமான 51 வயது லாரி ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொண்டு எதிர்த்திசையில் வாகனம் ஓட்டியதாக இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சி. அகிலன் என்ற அந்த லாரி ஓட்டுநர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரியுள்ளார். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, பெர்சியாரான் மொக்தார் டஹாரியில் நிகழ்ந்த இந்த விபத்தில், 17 முதல் 58 வயதுக்குட்பட்ட நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார்.
மெத்தாம்பெட்டமைன், ஆம்பெட்டமைன் ஆகிய போதைப்பொருட்களின் தாக்கத்தில் லாரியை ஓட்டி, கட்டுப்பாட்டை இழந்ததாக அகிலன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ், இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம். மற்றொரு வழக்கில், போதைப்பொருள் உட்கொண்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் மறுத்து விசாரணை கோரினார். இதனைத் தொடர்ந்து அவர் ஜுமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.








