ஷா ஆலாம், ஜனவரி.12-
சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறும் ஒழுக்கக்கேடான மற்றும் பிறழ்வான கலாச்சாரச் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா இன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உலு லங்காட்டில் வரும் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த Glamping with Pride என்ற எல்ஜிபிடி (LGBT) தொடர்பான நிகழ்ச்சிக்குச் சுல்தான் தனது கடும் எதிர்ப்பைப் பதிவுச் செய்துள்ளார்.
சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் தலைவர் Datuk Salehuddin Saidin மற்றும் சிலாங்கூர் முஃப்தி Datuk Dr Anhar Opir ஆகியோரை இன்று இஸ்தானா புக்கிட் காயாங்கனில் சந்தித்த போது சுல்தான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் எந்தவொரு மாவட்டத்திலும் எல்ஜிபிடி வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் விழாக்கள், ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் அல்லது பிரச்சாரங்களுக்குத் தான் அனுமதி வழங்கப் போவதில்லை என்று சுல்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானவை மட்டுமல்லாமல், அவை இறைவனின் கோபத்திற்கும் சாபத்திற்கும் வழிவகுத்து, மாநிலத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் என்று சுல்தான் எச்சரித்துள்ளார்.








