அம்பாங், பிப்ரவரி.17-
இன்று செவ்வாய்க்கிழமை, கம்போங் மெலாயு அம்பாங்கிலுள்ள லோரோங் மெர்பாவ் 3-இல் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்ததோடு, இரண்டு வாகனங்கள் தீயில் கருகின.
காலை 9.47 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையைச் சேர்ந்த உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 60 சதுர அடி பரப்புள்ள மூன்று வீடுகளில் அடுத்தடுத்து நெருப்பு பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கிருந்த இரு கார்களிலும் நெருப்பு பற்றியதில், அவற்றில் ஒன்று 60 விழுக்காடு தீயில் கருகியதாகவும் அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் குடியிருப்பாளர்கள் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.








