மலாக்கா, நவம்பர்.28-
மலாக்காவின் கோத்தா ஷாபண்டார் பகுதியில், நேற்று ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பின் 24-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 15 வயது இளம் பெண் உயிரிழந்தார்.
தனது பெற்றோருடன் விடுமுறையைக் கழிக்க மலாக்காவுக்கு வந்ததாக நம்பப்படும் அப்பெண், கடந்த சில நாட்களாக அந்த குடியிருப்பில் தங்கி வந்தார்.
நேற்று மதியம் 1.30 மணியளவில், டெலிவரி செய்யப்பட்ட உணவைப் பெற வீட்டிலிருந்து வெளியேறிய அவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால், பெற்றோர் அவரது கைப்பேசிக்கு அழைத்துள்ளனர்.
இந்நிலையில், குடியிருப்பின் பாதுகாவலர் வந்து தகவல் தெரிவித்த பின்னரே, அப்பெண் கீழே விழுந்திருப்பது பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, அப்பெண்ணின் உடலானது பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








