புத்ராஜெயா, ஜனவரி.16-
அரசியல் தலைவர் ஒருவரின் முன்னாள் ஆய்வியல் உதவியாளரான முகமது யூசோப் ராவுத்தர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போலித் துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை ஜூன் 15-ஆம் தேதி விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத் துணைப் பதிவாளர் மாஹ்யுடின் முஹமட் சோம் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு நிர்வாகத்தின் போது இந்தத் தேதி நிர்ணயிக்கப்பட்டதை வழக்கறிஞர் முஹமட் ராஃபிக் ரஷிட் அலி உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி, 33 வயதான முகமது யூசோப் ராவுத்தருக்கு எதிராக அரசுத் தரப்பு போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால், கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்தது.
கடந்த 2024 செப்டம்பர் 6-ஆம் தேதி, கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தின் முன் இருந்த காரில் 305 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே நாளில் ஜாலான் புக்கிட் கியாராவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் இரண்டு போலித் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும் அவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.








