Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி: பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவன்
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி: பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்த மாணவன்

Share:

சுங்கை பட்டாணியில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்திலிருந்து விழுந்து காயமடைந்த ஐந்தாம் படிவ மாணவர் தொடர்புடைய சம்பவத்தில், இதுவரை எந்தவிதமான பகடிவதை அல்லது குற்றவியல் கூறுகள் கண்டறியப்படவில்லை என கெடா மாநிலக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தாமான் ரியா ஜெயா இடைநிலைப் பள்ளியில் காலையில் மாணவர் ஒன்று கூடும் சபை நடைபெற்று கொண்டிருந்த போது , A கட்டடத் தொகுதியின் கீழ்ப்பகுதியில் அந்த மாணவன் விழுந்து கிடப்பதைச் துப்புரவுப் பணியாளர்கள் கண்டறிந்தனர்.

சம்பவத்தின் போது பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றுக்கூடும் சபையில் இருந்ததால், கட்டிடத்தின் மேல் பகுதியில் வேறு நபர்கள் யாரும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இதில் மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என கல்வித் துறை குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புத் திரை காட்சிகளை ஆய்வு செய்ததில், மாணவன் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்தில் கைகளில் முறிவு உட்பட உடலில் பல பகுதிகளில் காயமடைந்த மாணவன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து அவரது பெற்றோருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related News