கோலாலம்பூர், செப்டம்பர்.02-
தனது முன்னாள் உதவியாளர் யூசோப் ராவுத்தர் தமக்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் கூட்டரசு நீதிமன்றத்தில் 8 கேள்விகளை முன்வைப்பதற்குத் தாம் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செய்து கொண்டுள்ள மேல்முறையீட்டில் அடுத்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி விசாரணை நடைபெறவிருக்கிறது.
அடுத்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி விசாரணை நடத்துவதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தேதியை நிர்ணயித்துள்ளதாக யூசோப் ராவுத்தரின் வழக்கறிஞர் ரஃபிக் ரஷிட் அலி தெரிவித்தார்.
இந்த வழக்கு பொதுமக்கள் நலன் சார்ந்து இருப்பதால் வழக்கை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விசாரிப்பதை விட அதற்கு முன்னதாகவே வழக்கை நடத்த முடியுமா? என்பது குறித்து அப்பீல் நீதிமன்றத் தலைவருக்குக் கடிதம் எழுதும்படி தமது கட்சிக்காரர் யூசோப் ராவுத்தர் தங்களுக்கு பணித்து இருப்பதாக வழக்கறிஞர் ரஃபிக் ரஷிட் தெரிவித்தார்.
இது போன்ற வழக்குகள் சட்ட அம்சங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று தாங்கள் கேட்டுக் கொள்ளப் போவதாக ரஃபிக் ரஷிட் குறிப்பிட்டார்.








